இஸ்ரேல் காஸாவைச் சிறைச்சாலையாக மாற்றி, அப்பாவிகளைக் கொன்றுகுவிப்பதை துருக்கி வெறுமனே வேடிக்கை பார்க்காது: அர்தூகான்
இஸ்தான்பூல் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.01.2010) துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான்,

துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான்
இஸ்ரேல், காஸாவின் கீழ்க்கட்டமைப்பு வசதிகளையெல்லாம் நிர்மூலமாக்கி, அதனை ஒரு பெரும் சிறைச்சாலையாக மாற்றிக் கொண்டிருப்பதையோ அப்பாவி மக்களை இரக்கமின்றிக் கொன்றுகுவித்து வருவதையோ துருக்கி வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை’ என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
யூரோநிவ்ஸ் எனும் தொலைக்காட்சிக்கு அர்தூகான் அளித்த பேட்டியில், இஸ்ரேலும் உலகின் ஒரு பகுதியாகக் கருதப்படவேண்டும் என்று அந்த நாடு விரும்பினால், துருக்கியைப் போன்று மிகச் சிறந்த வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட ஏனைய நாடுகளுடனான தனது தொடர்புகளைப் பேணுவதில் அது மிகக் கவனமாகச் செயற்பட வேண்டும் என்பதோடு, தனது அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்துக் கட்டாயம் மறுபரிசீலனை செய்யவும் வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் தனது பிடிவாதமான போக்குகளின் விளைவாகத் துருக்கியுடனான தொடர்பினை இழப்பது குறித்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. குறிப்பாக, சர்வதேச ரீதியான ராஜதந்திர உறவுகளைப் பேணுவதில் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சர்வதேச நியமங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் அண்மையில் துருக்கியத் தூதுவருடன் நடந்துகொண்டது போன்ற செயற்பாடுகள் நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளுக்கு ஏற்புடையதன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலை எதிர்த்து டாவோஸ் மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்யும் அர்தூகான்
இதேநிலை தொடருமாக இருந்தால், எதிர்காலப் பேச்சுவார்த்தைகளின் போது பரஸ்பர நம்பகத்தன்மை அற்றுப் போவதோடு, இஸ்ரேலுடனான துருக்கியின் பல்வேறு உடன்படிக்கைகள் தொடர்பிலும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் அர்தூகான் சுட்டிக்காட்டினார்.
நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்
